தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பற்றிய குறிப்பு
இந்திரா சஹானி – எதிர் – இந்திய ஒன்றியம் [(1992) Supp(3) SCC 217 = JT 1992 (6) S.C. 273] என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் 16.11.1992 அன்று வழங்கிய தீர்ப்பில் கீழ்க்காணும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன:
“இன்று முதல் நான்கு மாத காலங்களுக்குள், இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின மக்கள் பட்டியலில் சேர்க்கக் கோரும் மனுக்கள், பட்டியலில் சேர்க்கப்படாமலிருத்தல் அல்லது மிகையாகச் சேர்க்கப்பட்டிருத்தல் குறித்த முறையீடுகள் ஆகியவற்றை பெற்று, ஆராய்ந்து, பரிந்துரைகள் வழங்கப்படுவதற்காக நிலையானதொரு அமைப்பை அமைக்கவேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் அமைப்பின் ஆலோசனைகள் பொதுவாக அரசால் கடைபிடிக்கத் தக்கவை.”
மேற்கூறப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டத்தின் கூறு 16(4)-ஐ, கூறு 340-உடன் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஒரு நிரந்தர அமைப்பாக அமைக்கப்பட்டது.
இவ்வாணையம் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரின் தலைமையில் ஆறு உறுப்பினர்களுடன் அரசால் அமைக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர்/இயக்குநர் இதன் உறுப்பினர் செயலாளர் ஆவார். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர்/இயக்குநர் ஆணையத்தின் அலுவல்சார் உறுப்பினர் ஆவார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் திரு கே. சண்முகம் தலைமையில் முதன் முறையாக 1993இல் நிரந்தர ஆணையம் அமைக்கப்பட்டது. அவரது பணிக்காலம் 15.3.1993 முதல் 15.3.1997. பின்னர், 17.3.1997 முதல் 14.3.2002 வரை நீதியரசர் திரு கே. எம். நடராசன் தலைவராக பதவி வகித்தார். நீதியரசர் திரு என். ஆறுமுகம் ஆணையத் தலைவராக 2.12.2002 முதல் 1.12.2005 வரை பணியாற்றினார். 14.7.2006 முதல் 4.7.2012 மற்றும் 28.12.2012 முதல் 27.12.2018 வரையிலான காலங்களில் நீதியரசர் திரு எம்.எஸ். ஜனார்த்தனம் ஆணையத் தலைவராக பணிபுரிந்தார். பின்னர், 8.7.2020 முதல் 19.9.2022 வரை நீதியரசர் திரு. எம்.தணிகாசலம் ஆணையத் தலைவராக இருந்தார். தற்போதைய ஆணையம் நீதியரசர் திரு வீ.பாரதிதாசன் தலைமையில் மறுசீரமைக்கப்பட்டு 17.11.2022 முதல் செயல்படுகிறது.